உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மத்திய ரயில் நிலையத்தில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற ஒரு பயணி, கால் இடறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையேயான இடுக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ரயில் சென்றுகொண்டிருந்ததால், அவர் உடனடியாக ரயிலில் நசுங்கிப் போனார். இந்த கோர விபத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே காவல்துறையினர் பஞ்சநாமா செய்து, அடையாளம் தெரியாத அந்தப் பயணியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இந்த விபத்தின்போது அருகிலிருந்தும் உதவாமல் காணொளி எடுத்தவரையும், தைரியத்துடன் ஓடிச் சென்று காப்பாற்றாத பார்வையாளர்கள் சிலரையும் சமூக ஊடகப் பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவசரத்தில் ஓடும் ரயிலில் ஏறுவதும், இறங்குவதும் உயிருக்கே ஆபத்தானது என்றும், பொறுமையுடன் ரயில் முழுமையாக நின்ற பின்னரே ஏறி, இறங்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் மீண்டும் ஒருமுறை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.