பெங்களூருவின் டோம்லூர் பகுதியில் நாயை உலாவ விட்டுக்கொண்டிருந்த 33 வயது பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 11:55 மணியளவில் இந்திராநகர் டோம்லூர் செகண்ட் ஸ்டேஜ் 5வது மெயின் ரோடில் நடந்த இச்சம்பவத்தில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தினமும் போல நாயை உலாவ விட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருந்து ‘மேடம்’ என்று யாரோ அழைத்ததால் திரும்பிப் பார்த்தார். அங்கு 30 வயது மதிக்கத்தக்க ஆசாமி, பழுப்பு நிற டி-ஷர்ட்டும் சாம்பல் நிற ஜிப் ஸ்டைல் ஷார்ட்ஸும் அணிந்திருந்த நிலையில், அவரை உற்றுப் பார்த்து அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்துகொண்டார்.
அதிர்ச்சியில் உறைந்துபோன அந்தப் பெண் சில நொடிகள் நின்றாலும், ஆசாமி தொடர்ந்து அநாகரீகமாக நடந்ததால் பயந்து நாயுடன் வீட்டுக்கு ஓடினார். பின்னர் தங்கை மற்றும் ஆண் நண்பரிடம் தெரிவித்து, மறுநாள் இந்திராநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 75-இன் கீழ் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடம் மற்றும் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து ஆசாமியைத் தேடி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அந்தப் பெண்ணுக்கு இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
