‘THE H FILES’ என்ற தலைப்பில், வாக்குத் திருட்டுப் பற்றிய ஹைட்ரஜன் குண்டை இன்று (நவ. 5) வெளியிடுவதாக அறிவித்திருந்த ராகுல் காந்தி, இன்று பகல் 12 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியாகப் பல தகவல்களை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரு தினங்களுக்கு முன்பாகவே, முன்னாள் முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி, பா.ஜ.க. கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும், அதற்கான வேலைகளைச் செய்துவிட்டோம்” என சிரித்தபடியே கூறியதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
நாட்டின் இளைஞர்கள் மற்றும் Gen Z தலைமுறையினர் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காகத் தான் தான் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிரூபிக்க, ஆதாரங்களுடன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். “பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு மாடல் அழகி, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா எனப் பல்வேறு பெயர்களில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
LIVE: Special press briefing by LoP Shri @RahulGandhi | Vote Chori – The H Files | AICC HQ, New Delhi. https://t.co/at2SahEnBt
— Congress (@INCIndia) November 5, 2025
“>
மேலும், “ஒரு பெண்மணி இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். இதனால் தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அழித்திருக்கிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் லட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்றும், ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்கள், வயதுகள், அடையாள அட்டைகள் மற்றும் முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்றும் ராகுல் காந்தி ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
