வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெல்லாவின் ‘இந்தியா பற்றிய உண்மையான பார்வை’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பாராட்டுகளை அள்ளி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ‘இந்தியாவை யாராவது காதலிப்பார்கள் அல்லது வெறுப்பார்கள்’ என்ற கருத்தை ஏற்றுக்கொண்ட பெல்லா, மேற்கத்திய நாடுகளில் ‘மரியாதைக் குறைவு’ அல்லது ‘தவறு’ எனக் கருதப்படும் ஹார்ன் அடிப்பது, உற்றுப் பார்ப்பது, கையால் சாப்பிடுவது, வரிசையில் நிற்காமை போன்றவை இங்கு வழக்கமானவை என்றும், அவை தவறல்ல, வேறுபாடு மட்டுமே என்றும் தெளிவுபடுத்தினார்.
View this post on Instagram
மேற்கத்திய பழக்கவழக்கங்களை உலகளாவிய தரமாகக் கருதக்கூடாது எனவும், இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை, பிரிட்டிஷ் காலனித்துவத்தின் நீண்டகால பாதிப்புகள் இன்னும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
‘இந்தியா வெறுப்பு வீடியோக்கள்’ எளிதில் வைரலாகின்றன என்பதை ஒப்புக்கொண்ட பெல்லா, அதேநேரம் குப்பைப் பிரச்னை, உள்கட்டமைப்பு குறைபாடுகள் போன்றவை நாட்டின் பழமையாலும், காலனித்துவ வடுக்களாலும் ஏற்பட்டவை என்றார்.
ஆனால் இங்கு அசாத்தியமான சமூக உணர்வு, ஆழமான உண்மையான கலாசாரம், ஆர்வமூட்டும் வாழ்க்கைமுறை உள்ளதாகவும் பாராட்டினார்.
‘எத்னோசென்ட்ரிசம்’ எனப்படும் சொந்த கலாசாரத்தை மட்டுமே உயர்வாகக் கருதும் போக்கைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவரது பதிவுக்கு, ‘இந்தியாவின் இரு பக்கங்களையும் சமநிலையாகக் காட்டியதற்கு நன்றி’, ‘பொய் பிரசாரங்களை உடைத்தீர்கள்’ என ஆயிரக்கணக்கானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
