திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காட்டு தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் நகரின் முக்கிய குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதிகள் அருகே இருக்கும் காய்ந்த, செடி கொடிகளில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.