திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் ரத்தம் சொட்ட, சொட்ட வேடந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து என்னை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். மேலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் இணைந்து என்னை தாக்கியதால் அடிபட்டு ரத்தம் கொட்டுவதாக அந்த பெண் கூறியதால் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணின் தலையில் எந்த காயமும் இல்லை. அப்போதுதான் அவர் குங்குமத்தை தண்ணீரில் கலந்து தனது தலையில் தேய்த்து வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும் அந்த பெண் தான் எழுதி வைத்திருந்த மனுவை கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அந்த பெண்ணின் சொந்த ஊர் முத்துபழனியூர் ஆகும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர் வேடந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவில் குடிவந்தார்.

இவருடன் இருக்கும் 50 வயது மதிக்கத்தக்க நபர் இவரது கணவர் இல்லை. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் கண்டித்தனர். இதேபோல் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் கண்டித்தனர். அவர்களை சிக்க வைப்பதற்காக அந்த பெண் குங்குமத்தை தண்ணீரில் கலந்து ரத்தம் கொட்டுவது போல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஓடி வந்தது தெரியவந்தது. இப்படி நாடகம் ஆடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அந்த பெண்ணை எச்சரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.