பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் பெயரால் மற்றவர்களால் கேலி செய்யப்படுவதைத் தடுக்கவும், அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கவும் ராஜஸ்தான் கல்வித் துறை “சர்தக் நாம் அபியான்” என்ற புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ அல்லது தற்செயலாகவோ குழந்தைகளுக்கு வைக்கப்படும் சில வினோதமான மற்றும் அர்த்தமில்லாத பெயர்கள், அவர்கள் வளரும்போது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. இதனை மாற்றும் நோக்கில், அர்த்தமுள்ள 2,950 புதிய பெயர்கள் அடங்கிய பட்டியலை கல்வித் துறை தயாரித்துள்ளது.
இதில் சிறுமிகளுக்காக 1,541 பெயர்களும், சிறுவர்களுக்காக 1,409 பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெயர் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு குழந்தையின் ஆளுமையின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ள கல்வித் துறை, விருப்பமுள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இந்தத் திட்டம் குறிப்பாக 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும். 8 அல்லது 9-ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டால், அதற்கு ஏற்ப அவர்களது பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களிலும் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயமில்லாத இந்தத் திட்டம், மாணவர்களின் சுயமரியாதையை வளர்ப்பதோடு, அவர்களின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
