வயதான பெற்றோரை கைவிடுவது சமூகத்தில் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலனைப் பேணுவதற்காக, அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது.

அதில் முக்கியமானது, ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007’. இந்த சட்டத்தின்படி, வயதான பெற்றோருக்கு போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையில், அவர்களது பிள்ளைகள் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். இது குறித்து கோட்டாட்சியர் தலைமையிலான தீர்ப்பாயத்தில் மனு செய்யலாம்.

இச்சட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பெற்றெடுத்த தாய் தந்தையை மட்டுமல்லாமல், மாற்றாந்தாய், மாற்றாந்தந்தை, வளர்ப்புத் தாய், வளர்ப்புத் தந்தை ஆகியோரும் இச்சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகையைப் பெற முடியும். இதுபோலவே, பிள்ளைகள் இல்லாத மூத்த குடிமக்களும், தனது சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அல்லது தனது காலத்திற்குப் பிறகு தனது சொத்தை அடைய இருப்பவர் மீதும் பராமரிப்புத் தொகை கோரி மனு செய்யலாம்.

எனவே, வயதான பெற்றோரை கைவிடுவது என்பது சட்டப்படி குற்றமாகும். அவர்களுக்கு உரிய பராமரிப்பு வழங்காத பிள்ளைகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். அந்த நம்பிக்கை உடையும் போது அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.