தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு விதமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 30,000 ஆக தமிழ்நாட்டில் இருந்த நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என ஸ்டாலின் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் வார் ரூம் என்ற புதிய கட்டமைப்பை உருவாக்கி மருத்துவமனை சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்தார்‌.

அதன் பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து மட்டுமே பெற்று வந்த நிலையில் உலகளாவிய டெண்டர் விட்டு நேரடியாக வெளிநாட்டில் இருந்து தடுப்பூசிகளை பெறும் முயற்சிகளை ஸ்டாலின் மேற்கொண்டு கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு கொரோனாவை தடுக்கும் ரெம்டெசிவர் மருந்துகளை மருத்துவமனைகள் மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் துயரை போக்குவதற்காக அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கினார். அதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் மருத்துவ செலவுகளை காப்பீடு மூலம் தமிழக அரசே ஏற்கும்  என்று அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு ‌ இறுதியில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகளும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கு ஆகும் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதேபோன்று மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முதலில் ஸ்டாலின் மேற்கொண்டார். மேலும் மருத்துவத்துறையில் முதல்வர் ஸ்டாலின் பல அதிரடியான நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் நாட்டிற்கே தமிழ்நாடு மருத்துவ முறை துறையில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.