மத்தியப் பிரதேசம், கட்னி மாவட்டத்தைச் (Katni District) சேர்ந்த 55 வயது போலா மிஸ்ரா என்ற தந்தை, தனது 18 வயது மாற்றுத்திறனாளி மகனின் ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்காக, இடௌரா கிராமத்திலிருந்து 66 கிலோமீட்டர் தூரம் மகனைச் சுமந்தபடியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற சோகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக ஆதார் கேஒய்சி (Aadhaar KYC) அப்டேட் செய்யப்படாததால், மகனுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றும் அதிகாரிகளால் மகனின் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், மகனின் விரல் ரேகையை (Fingerprints) இயந்திரத்தால் பதிவு செய்யவோ, படிக்கவோ முடியவில்லை என்பதாகும். ஆனால், உதவி கோரியும் எந்த அதிகாரியும் தந்தையின் கோரிக்கையை ஆட்சியரிடம் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

பல மணி நேரம் மகனைச் சுமந்து, ஒவ்வொரு கதவாகத் தட்டியும் ஏமாற்றத்துடன் போலா மிஸ்ரா திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்துச் செய்தி வெளியான பின்னர், மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் திவாரி, குழந்தைக்கு ஓய்வூதியம் மற்றும் ரேஷன் பலன்கள் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.