கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கரடகி தாலுகாவில் உள்ள சித்தாப்பூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (29). இவர் தனது உறவினரான ரோஜா (27) என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிரஞ்சீவி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியைச் சந்தேகப்பட்டு அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை இருவீட்டாரின் பெற்றோர்கள் சமாதானம் செய்தும் சண்டை தொடர்ந்ததால், ரோஜா இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
பின்னர், அவர் பெற்றோரின் உதவியுடன் விவாகரத்து கோரி கொப்பல் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
விவாகரத்து மனு தொடர்பாக, சிரஞ்சீவி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, கணவன் மனைவி இருவருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, திடீரெனப் பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து, நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த மனைவி ரோஜா, மாமனார் சங்கரப்பா மற்றும் மாமியார் சாந்தம்மா ஆகிய மூவர் மீதும் பெட்ரோலை ஊற்றித் தீவைத்து உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றார்.
அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாகத் தலையிட்டுச் சிரஞ்சீவியைத் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ரோஜா அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த புறநகர் போலீசார், சிரஞ்சீவி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
