ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே. இ.இ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் எங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இச்சூழ்நிலையில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்விற்கு தயாராகி வந்த 24 வயது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கோட்டா நகரிலுள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த மாணவி  தனது அறையை விட்டு வெளியேறி வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது மாணவி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோட்டா நகரில் இந்த மாதத்தில் நடந்த 5-வது தற்கொலை சம்பவம் ஆகும். முன்னதாக கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒடிசாவை சேர்ந்த 18 வயது மாணவர் கடந்த 17-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.