இந்தியாவில் நவராத்திரி விழா கோலாலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வரும். அதில் சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்தா நவராத்திரிகள். நவராத்திரியின் போது துர்க்கையின் 9 வடிவங்களும் வழிபடப்படுகிறது. இந்து நாள்காட்டியின் படி ஷரதிய நவராத்திரி இந்த ஆண்டு அக்டோபர் 15- ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24-ஆம் தேதி முடிவு பெறுகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று துர்கா தேவி வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியின் வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் வழிபாடும் நடக்கும். நவராத்திரியின் போது வீடுகளில் கொலு பண்டிகை நடத்தப்படுகிறது. ஏராளமான பொம்மைகளை வீடுகளில் வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்வார்கள். நவராத்திரியின் எட்டாவது நாள் ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாளில் மகேஸ்வரியாக காட்சி அளிக்கும் அன்னையை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். இரண்டாம் நாளன்று கௌமாரி அலங்காரத்தில் இருக்கும் அன்னைக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நைவேத்தியமாக வைக்கலாம். மூன்றாம் நாள் வராகி ஆகிறாள் அன்னை. செண்பகம் மற்றும் சம்பங்கிகள் வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

நான்காம் நாள் மகாலட்சுமியாக காட்சியளிக்கும் அன்னைக்கு மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும். ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ஆகிறாள் அன்னை. முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் ஏற்றவை. ஆறாம் நாள் இந்திராணியாக காட்சியளிக்கும் அன்னைக்கு ஜாதி மலரை வைத்து தேங்காய் சாதம் படைத்து வழிபடலாம்.

ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்து எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்யலாம். எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் காட்சியளிக்கும் அம்பிகைக்கு ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம். ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள் அன்னை. இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து, தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபடலாம்.