நவராத்திரி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நவராத்திரி நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். நவராத்திரியின் முதல் மூன்று துர்கா தேவி வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியின் வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் வழிபாடும் நடக்கும். நவராத்திரியின் போது வீடுகளில் கொலு பண்டிகை நடத்தப்படுகிறது.
ஏராளமான பொம்மைகளை வீடுகளில் வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்வார்கள். நவராத்திரி விரதத்தை கடைபிடிக்க போகிறீர்கள் என்றால் சில விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். நவராத்திரி விரதத்தின் போது தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். இதனையடுத்து சுத்தமான ஆடைகளை அணிந்து பூஜை அறையை சுத்தம் செய்த பின்னரே வழிபட தொடங்க வேண்டும். வீட்டின் சுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கோபம், பேராசை, பற்றுதல் ஆகியவற்றிலிருந்து விரத நாட்களில் விலகி இருக்க வேண்டும். விரதத்தின் போது பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். நவராத்திரி விரதம் இருப்பவர் பொய் சொல்லக்கூடாது என்பது நம்பிக்கை இதனால் உண்மையை பேச வேண்டும். யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். நவராத்திரியின் போது மது மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் நகங்கள், முடி வெட்டுவதை தவிர்த்து மத நம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும். ஒன்பது நாட்களும் சுத்தமாக துவைத்து ஆடைகளை பயன்படுத்த வேண்டும். நவராத்திரியின் போது அன்னை தேவியை வழிபட்டால் வீட்டில் நீங்காத மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும். 9 நாட்களும் விரதம் இருந்து தனது பக்தர்கள் வேண்டி கேட்பதை அன்னை துர்கா தேவி அள்ளி கொடுப்பார். மேலும் துர்கா தேவியை வழிபட்டால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கி வாழ்க்கை நல்வழிப்படும் என்பது ஐதீகம்.