உத்தராக்கண்ட் மாநிலம் தெக்ரூனில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட காவல் அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பூர் காவல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த சாங்கி சௌத்ரி, மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டி, கடந்த புதன்கிழமை இரவு வாகன் ஆர் மற்றும் தார் ஆகிய இரு வாகனங்களை மோதி சேதப்படுத்தினார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இரவு பணியில் இருந்த போதிலும், சாங்கி சீருடை அணியாமல் இருந்ததாகவும், கோபமடைந்த மக்கள் அவரைச் சூழ்ந்து கேள்வி எழுப்பியபோது, அவர் தன்னை காப்பாற்ற வந்த காவலர்களின் பின்னால் மறைந்து கொள்ள முயன்றதாகவும் தெரியவந்தது.

சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது, அதில் ஒரு பெண், “என் புதிய வாகனம் சேதமடைந்தது, இப்போது புது கார் வாங்கித் தருவீர்களா?” என கேள்வி எழுப்புவதைக் கேட்க முடிகிறது.

இந்தச் சம்பவத்தை தீவிரமாக கருதிய தெக்ரூன் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி), உடனடியாக சாங்கி சௌத்ரியை பணியிடைநீக்கம் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக கால்சி காவல் நிலைய பொறுப்பாளர் தீபக் தாரிவால், ராஜ்பூர் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த விசாரணை நகர காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியின் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.