சீனாவின் ஆன்லைன் கேமிங் நிறுவனமான ‘டுயோய்’-யின் நிறுவனர் சூ போ (48), அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. தன்னை “சீனாவின் முதல் தந்தை” என்று அழைத்துக்கொள்ளும் சூ, ஒரு பெரிய குடும்ப வம்சாவளியை உருவாக்க வேண்டும் என்ற தனது இலக்கைத் தொடர்ந்து பேசியுள்ளார்.

மேலும், தனது சில குழந்தைகள் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்கின் குழந்தைகளை மணக்கலாம் என்றும் அவர் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ மேற்கோள் காட்டிய பதிவுகளின்படி, சூ குறைந்தது “ஐம்பது தரமான மகன்களை” பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அவரது நிறுவனமான டுயோய், அவர் அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் என்பதைப் பின்னர் உறுதிப்படுத்தியது. இந்த விவகாரத்தில், சூ போவின் முன்னாள் காதலி டாங் ஜிங் என்பவர், இந்த பில்லியனர் மொத்தம் முன்னூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டியதோடு, அவர்களில் பதினொரு குழந்தைகளைத் தான் பல ஆண்டுகளாக வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களின்படி, சூ போ, வாடகைத் தாய் மூலம் பிறக்கவிருக்கும் நான்கு குழந்தைகள் மற்றும் ஏற்கனவே பிறந்த குறைந்தது எட்டு குழந்தைகளுக்குச் சட்டப்பூர்வ பெற்றோருக்கான உரிமைகளைக் கோரி 2023ஆம் ஆண்டின் மத்தியில் தாக்கல் செய்த பல மனுக்களை கலிபோர்னியா நீதிபதி ஒருவர் விசாரித்தார்.

காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான சூ போ, தான் குறைந்தது இருபது அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்க விரும்புவதாகவும், தனது வணிகத்தைக் கவனித்துக்கொள்ளக்கூடிய ஆண் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தபோது, நீதிபதி அவரது மனுக்களை நிராகரித்தார்.

மக்கள் தொகை குறைவது குறித்துப் பகிரங்கமாகக் கவலை தெரிவித்த எலான் மஸ்கின் கருத்துக்களால் சூ போ ஈர்க்கப்பட்டதாகவும், தனது குழந்தைகளை மஸ்கின் குழந்தைகளுடன் திருமணம் செய்து வைத்து ஒரு சக்திவாய்ந்த குடும்ப வம்சத்தை உருவாக்க சூ கனவு கண்டதாகவும் கூறப்படுகிறது.