கரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாணிக்கவாசகம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் காந்திகிராமத்தில் இருக்கும் டீக்கடை உரிமையாளர் பாரதிராஜாவிடம் அந்த பணத்தை கொடுக்குமாறு ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மாணிக்கவாசகம் டீக்கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்டு பாரதிராஜா ரவிச்சந்திரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காந்திகிராமம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து பாரதிராஜா ரவிச்சந்திரனிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.