திருவள்ளூர் ஆவடி ஸ்ரீவாரி நகரில் வசித்து வரும் ஸ்ரீபன் ராஜ் -சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. இதையடுத்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதி இல்லாததால் மகளின் முகச் சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதை அறிந்த முதலமைச்சர், சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பின் ஈவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்,.8) 2-வது முறையாக சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாயின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் சிறுமியிடம் கூறியதாவது, எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும் எனவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.