குடிமை பணி தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல தேவர்கள் குடிமைப்பணி தேர்வு உட்பட மத்திய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்பு  தேர்வுகளுக்கான வயது வரம்பை தவறவிட்டனர். ஒருமுறை நடவடிக்கையாக வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என தேவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன்  கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளையும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்வர்களின் இந்த கோரிக்கைக்கு வேறு கட்சிகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றின் தாக்கங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அரசு பணி தேர்வுகளை எழுதுபவர்களுக்கான வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதேபோல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் படை தேர்வுகளில் அனைத்து பிரிவினருக்கும் ஒருமுறை நடவடிக்கையாக மூன்று ஆண்டுகள் வயது வரம்பை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த ஒரு முறை தளர்வு வாய்ப்பை வழங்குவதால் அரசுக்கு எந்தவித நிதிச் சுமையும் ஏற்படாது. மேலும் குடிமைப் பணியில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது வாய்ப்பை வழங்கும். அதனால் தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.