திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தை பின்னடைவுக்குத் தள்ள நினைத்த சக்திகளுக்கு எதிராக மக்கள் துணையுடன் திமுக வெற்றி பெற்றது. எந்த விதமான அவசர முடிவுகளாலும், வன்முறையாலும் அல்ல; உறுதியான கொள்கை பாதையிலேயே கட்சி பயணித்துள்ளது.
பல சவால்கள், அரசியல் அடக்குமுறைகள் இருந்தபோதிலும் திமுக தொடர்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அதன் ஆழமான அடித்தளமே. மக்களோடு நேரடியாகச் சென்று உறவுகளை உருவாக்கியதன் விளைவாக கட்சி வலுவடைந்தது.
இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முழுமையாக உணர்ந்து செயல்பட்டு வருகிறார். அரசியல் களத்தில் தைரியமாக இறங்கி செயலாற்றி, எதிர்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்.
கட்சியின் கொள்கை உறுதியை வலுப்படுத்தும் நோக்கில், பாசறை கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார். இதன் காரணமாக, திமுகவின் கொள்கை எதிரிகள் அவரை ‘அதிக ஆபத்தானவர்’ என விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், புதிய பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் அறிவுத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, கட்சியின் அறிவுசார் அடையாளத்தை அவர் மேலும் வலுப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் பாதுகாப்பு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பும் திமுகவின் தோள்களில் உள்ளது. அந்த கடமையை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.
