திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு அகஸ்தியர் புரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் விக்ரமசிங்கபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் புறப்பட்டான். இந்நிலையில் திடீரென வந்த குரங்கு கவினின் வலது காலை பிடித்து கடித்து குதறியதால் வலியில் சிறுவன் அலறி துடித்தான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குரங்கை விரட்டி அடித்தனர்.

இதனையடுத்து கவினை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் கவின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, வடக்கு அகஸ்தியர் புரம் பகுதியில் இருக்கும் வீடுகளை சுற்றி இருக்கும் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே குரங்குகளைக் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.