விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பணம் கொப்பம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜியின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் 1 சதவீத வட்டியில் தனிநபர் கடன் வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பாலாஜி சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் உங்களது வங்கி கணக்கு புத்தகங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட நகல்களை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து பாலாஜி அவற்றை அனுப்பி வைத்தவுடன் 2 லட்சம் ரூபாய்க்கு கடன் தருவதாக அந்த நபர் கூறியுள்ளார். மேலும் விண்ணப்ப கட்டணம், ஆவணம் தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்காக அந்த நபர் பாலாஜியிடம் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 435 ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி பாலாஜிக்கு எந்த கடனும் வாங்கி கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக பாலாஜி மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரின் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.