கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடராஜமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் ஆவார். இந்நிலையில் நடராஜமூர்த்தி புதிதாக செல்போன் வாங்குவதற்காக இணையதளத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜமூர்த்தியின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மற்றும் இணையதள லிங்க் வந்தது. அதில் குறைந்த விலையில் செல்போன் வாங்க வேண்டும் என்றால் இந்த இணையதள லிங்கிற்குள் செல்லலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நம்பி நடராஜமூர்த்தி லிங்கிற்குள் சென்று பல்வேறு வகையான செல்போன்களை பார்த்துள்ளார். அப்போது 4000 ரூபாய்க்கு செல்போனை ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஒரு வாரம் ஆகியும் செல்போன் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நடராஜமூர்த்தி அந்த லிங்க் தொடர்பாக விசாரித்த போது பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் போலியான லிங்க் அனுப்பி 4000 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக நடராஜமூர்த்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.