கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் ஏராளமான கஞ்சா சாக்லேட்டுகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பீகாரை சேர்ந்த மகேஷ்குமார் என்பதும், அவர் அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருவதும் தெரியவந்தது. இவர் மில்களில் வேலை பார்க்கும் வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் மகேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 4000 கஞ்சா சாக்லேட்டுகள், 2 3/4 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.