கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பாளையத்தில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்தேன். அப்போது ஜவஹர் பிரசாத், என்.எஸ் சரவணகுமார், அன்பு பிரசாத், ஜி.சரவணகுமார் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் என்னிடம் இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறையில் வேலை இருப்பதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறோம் எனவும் கூறினர். இதனை நம்பி அவர்களிடம் பல்வேறு தவணைகளாக 21 லட்சம் ரூபாயை கொடுத்தேன்.

இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த பணி நியமன ஆணையை சரி பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதேபோன்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரிடம் அவர்கள் கோடிக்கணக்கில் வசூலித்து பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் ஜவஹர் பிரசாத் உட்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.