தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். அதன்படி சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு தலைவர் அன்பரசு, சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த 10 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் 13 பேரும் சிடி நிர்மல் குமாரை பின்பற்றி அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்தனர்.

அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை விட எனது மனைவி 1000 மடங்கு வலிமையானவர் என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், உங்கள் மனைவி ஜெயலலிதா அம்மாவை விட 1000 மடங்கு வலிமையானவராக இருந்தால் “மோடி ஆ இல்ல இந்த லேடி ஆ” என்று வெளிப்படையாக சவால் விடுங்கள். முதலில் ஜெயலலிதா அம்மாவை பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்துங்கள் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.