கடந்த 2021-22 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மீன்வளர்க்கும் ஆர்வம் இருந்தால் இதில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதை செயல்படுத்த 3 சென்ட் நிலம் போதுமானது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் இத்திட்டத்தில் சொந்தமாக நிலம் இருந்தால் பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் திட்ட செலவு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இந்நிலையில் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு மானியம் 40% என 3 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

இதனையடுத்து பட்டியல் பிரிவினர்களுக்கு 60% மானியம் என 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். எனவே இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்டத்தின் இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், பயனாளர்களை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இதில் பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும். இங்கு நேரில் சென்றோ அல்லது அலுவலக தொடர்பு எண்கள் 0416- 2240329, 9384824248 மூலமாகவோ மற்றும்  [email protected] என்ற இணையதளம் மூலமோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.