தஞ்சாவூர் மாவட்டத்தில்  பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், மானாவாரி பயிர்களும் சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த பயிர்களை வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு பணி நடத்தவில்லை எனவும் இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செய்த விவரங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே சின்னதுரை தலைமையில் நேற்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையில் சேதமடைந்த நெற்பயிர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் சேத மதிப்பீடுகளை உடனடியாக கணக்கிட்டு சேதமடைந்து நெற்பயர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000, மானாவரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையினை பெற்று தர கோரியும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக பார்வையிட்டு கணக்கெடுப்பு பணி செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.