முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். 10.5% இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்” என அந்நபர் பேசும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ராஜேஸ்வரன் மீது அதிமுகவினர் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரனை தாக்கியதாக இபிஎஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில், அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் திமுக இந்த பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளது. திமுக அரசை கண்டித்து நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.