தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி மகாமக திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் மதுபானக் கடைகளை மூடவும், உள்ளூர் விடுமுறை அளிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடந்த ஆண்டு (2021) மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட நிலையில், இதுவரை அந்த உத்தரவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த ஆண்டு கண்டிப்பாக திருவிழாவை முன்னிட்டு மது கடைகளை மூடவும் மற்றும் உள்ளூர் விடுமுறை அளிக்கவும் உத்தரவு கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் உள்ளதால், அவை மட்டும் திருவிழாவின்போது அடைக்கப்படும் என நீதிபதி தெரிவித்து, இந்த வழக்கை முடித்தார்.