திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி கணவாய் தோட்டத்து பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது போர்வையால் முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடி வந்த வாலிபர் வெள்ளையம்மாளின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கலியை பறித்தார். இதனை தடுக்க முயன்ற போது மூதாட்டி மீது போர்வையை போர்த்தி விட்டு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து வெள்ளையம்மாள் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை தேடினர். அப்போது அங்குள்ள தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சமத்துவபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.