அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகத் தலைவர்களுடன் ‘ஜெசிகா பாஸ்டர்’ என்ற ராணுவ வீராங்கனை இருப்பது போன்ற புகைப்படங்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன. ராணுவ உடையில் கம்பீரமாகவும், சில சமயம் உயர்தர காலணிகளை அணிந்து போர்க்கப்பல்களில் நடப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ள இவரை, டிரம்பின் தீவிர ஆதரவாளர்களான அமைப்பினர் “உண்மையான தேசபக்தி கொண்ட அழகிய வீராங்கனை” எனப் பாராட்டி வருகின்றனர்.
மேலும் வெறும் நான்கு மாதங்களில் இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு 10 லட்சம் பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ள நிலையில், இவர் டிரம்பின் அரசியல் முடிவுகளை நியாயப்படுத்தும் ஒரு பிம்பமாக முன்னிறுத்தப்படுகிறார். இருப்பினும், வாஷிங்டன் போஸ்ட் நடத்திய ஆய்வில் ‘ஜெசிகா பாஸ்டர்’ என்ற பெயரில் அமெரிக்க ராணுவத்தில் யாரும் இல்லை என்பதும், அந்த புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் மீதான சில அரசியல் அதிருப்திகளை மறைக்கவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை மக்களிடையே திணிக்கவும் இத்தகைய போலி பிம்பங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் இத்தகு போலிச் செய்திகள் வரும் காலங்களில் அரசியல் ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
