மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 143 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில்பாதை அமைப்பதற்கு ரெயில்வே துறை முடிவு எடுத்து கடந்த 1999-2000-ஆம் ஆண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த  புதிய அகல ரெயில்பாதையை அமைக்க ரூ.800 கோடி என்ற திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டு, மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அருப்புக்கோட்டை உள்ளிட்ட 5 இடங்களில் ரெயில்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரையிலும், 2-ம் கட்டமாக மேலமருதூரில் இருந்து குளத்தூர், விளாத்திகுளம், வழியே அருப்புக்கோட்டை வரையிலும், 3-ம் கட்டமாக அருப்புக்கோட்டையில் இருந்து திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பிரிவு வரையிலுமாக ரெயில்பாதை அமைக்கப்படும் என திட்டமிடப்பட்டது.

அதன்படி மேலமருதூர் வரை முதற்கட்டமாக புதிய ரெயில்பாதை அமைக்கப்பட்ட நிலையில்,  திருப்பரங்குன்றம்  தாலுகாவில் மட்டும் 210 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதால், மதுரை டி.ஆர்.ஓ. சக்திவேல், திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் மாதவன், வட்ட சார்பு ஆய்வாளர் ரகுபதி, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ரமேஷ், கிராம நிர்வாக அதிகாரி கந்தவேல் ஆகியோர் இதற்கான உரிய இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் மதுரை-திருமங்கலம் இடையே அகல ரெயில்பாதை இடத்தை ரெயில்வே துறைக்கு ஒப்படைப்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.