சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சை பலனின்றி 17-ந் தேதி அன்று அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி உயிரிழந்தார் என்று அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையம் முன்பு மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து மாணவி அபிநயாவின் உடலை, அவரது வீட்டில் மின்சார குளிர்சாதன சவப்பெட்டியில்  வைத்திருந்தனர். அப்போது அவரது உறவினர்கள் மற்றும் அவரோடு படித்த மாணவ-மாணவிகள் உள்பட பலர் மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதில்,  பெட்டியை தொட்டபடி நின்ற 20 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேருக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் சிகிச்சை பலனின்றி சென்னை காசிமேட்டை சேர்ந்த மாணவியின் உறவினர் அஜித் (19) என்பவர் பரிதாபமாக  உயிரிழந்தார்.

மேலும் சவுமியா, சுந்தரி ஆகிய 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்சாதன சவப்பெட்டிக்கு சென்ற மின்இணைப்பை  உடனடியாக துண்டித்ததால் மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் குளிர்சாதன சவப்பெட்டியின் உரிமையாளர் தீனன் என்ற நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.