உத்தரகாண்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோ லக்கி பிஷ்ட், தற்போது நடிகராக மாறியுள்ளார். MX பிளேயரில் ஒளிபரப்பாகும் “சேனா – கார்டியன்ஸ் ஆஃப் தி நேஷன்” என்ற வலைத் தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபினவ் ஆனந்த் இயக்கியுள்ள இந்தத் தொடர், அமெரிக்காவில் உயரிய வேலை செய்துகொண்டிருந்த கார்த்திக் என்ற இளைஞன், அதை விட்டுவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக வந்து, பயங்கரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதைக் கூறுகிறது.

ஊடகங்களிடம் பேசிய லக்கி பிஷ்ட், “திரையில் ஒரு உண்மையான வீரரை சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த வேடத்தை ஏற்றுக்கொண்டேன். எனது இராணுவ அனுபவமும், பயிற்சியிலும் கற்றுக் கொண்ட தைரியமும் இந்த கதாபாத்திரத்தை இயல்பாக வடிவமைக்க உதவியது. நடிப்பு எனக்கு புதிதான துறை தான், ஆனால் ஒரு வீரராக நடித்தது என் நிஜ வாழ்க்கை உணர்ச்சிகளை கேமரா முன் வெளிப்படுத்திய அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

லக்கி பிஷ்ட் தனது வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்தவர். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமன்றி, எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங், முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகோய் போன்ற முக்கிய பிரபலங்களுக்கும் மெய்க்காப்பாளர் பணியாற்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்தபோது பாதுகாப்பு அளித்த குழுவிலும் லக்கி பிஷ்ட் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘ரா’, ‘என்எஸ்ஜி’ மற்றும் ‘அசாம் ரைபிள்ஸ்’ போன்ற உயர்மட்ட பாதுகாப்பு படைகளில் பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி, லக்கி பிஷ்ட் தற்போது கலைத்துறையில் புதிய பயணம் தொடங்கியுள்ளார். அவரது முதல் வலைத் தொடரான “சேனா”, MX பிளேயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், திகில் மற்றும் சாகசம் கலந்த சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.