புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதற்காக கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட போது கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மத்தியில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து சாமியை தரிசனம் செய்த பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இந்த திருவிழாவின்போது தினமும் மாலை நேரத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவது வழக்கம். இந்த திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் தேரோட்டம் வருகிற 7ம் தேதி மாலை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து வருகிற 7ம் தேதி நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

அதோடு இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி வேலை நாள் என தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 7 ம் தேதி கல்லூரி, பள்ளிகளில் பொது தேர்வுகள் இருந்தால் அவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் , தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே தேதியில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.