ஈரான் மீதான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்க கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ளது. ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்கா தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், ‘டவுஸ்கா’ என்ற ஈரானிய சரக்கு கப்பல் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறிச் செல்ல முயன்றது.

இதனால் ஆவேசமடைந்த அமெரிக்க கடற்படை, அந்த கப்பலை வழிமறித்து அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமன் கடல் பகுதியில் எங்களது வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் ஒரு சட்டவிரோதச் செயல்.

இது சர்வதேசச் சட்டங்களையும், ஐ.நா. சாசனத்தையும் மீறும் கடற்கொள்ளைத்தனமான செயலாகும். கப்பல் ஊழியர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், கப்பலையும் ஊழியர்களையும் உடனடியாக விடுவிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஈரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி மாற்றத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.