சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அங்கேயே வசித்து வந்த அவர் கடந்த 2 நாட்களாக வெளியே வராத நிலையில் அந்த வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

இதனால் அருகில் இருந்தவர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வக்கீல் வெங்கடேசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கு அவரை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் வெங்கடேசனின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அவர் வசித்து வந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது 4 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனின் வீட்டிற்கு வந்ததும், அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெங்கடேசனின் மனைவி தன் கணவரது கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் நிலப்பிரச்சினை தொடர்பாக வெங்கடேசனுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் வெங்கடேசனிடம் ஓட்டுனராக வேலை பார்த்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோரை  காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.