விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி கவர நாயுடு காலனியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மோனிகா(12), ரித்திகா மேரி(9) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மோனிகா 6- ஆம் வகுப்பும், ரித்திகா 4- ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அந்தோணி ராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தைக்கு ஆதரவாக பேசிய மோனிகாவை ஜான்சி ராணி கரண்டியால் அடித்து படுகாயப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் மோனிகாவை ஜான்சிராணி வீட்டில் வைத்து பூட்டிவிட்டு ரித்திகாவுடன் வெளியே சென்றுள்ளார்.

இதனையடுத்து ஜான்சி ராணி தனது மகளுடன் விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மோனிகா வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.