கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கடந்த 1996-ஆம் ஆண்டு கல்யாணி யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை பாகன் ரவி பராமரித்து வருகிறார். தற்போது 32 வயதான கல்யாணி குளிப்பதற்கு குளியல் தொட்டி கட்டவும், நடை பயிற்சி மேற்கொள்ள தளம் அமைக்கவும் இந்து சமய அறநிலை துறை சார்பில் ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அங்காளம்மன் கோவிலில் பின்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் இடத்தில் யானை குளிப்பதற்காக பெரிய அளவிலான குளியல் தொட்டி கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது, கோவில் வளாகத்தில் இருக்கும் கொட்டகையில் யானை கல்யாணி கட்டப்படுகிறது. கல்யாணி கஜ பூஜை, மற்றும் கோ பூஜைக்காக அழைத்து வரப்படும். தற்போது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குளியல் தொட்டி மற்றும் நடை பயிற்சி பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 3 மணி நேரம் வரை கல்யாணி தொட்டியில் நன்றாக குளியல் போடும். 10 கிலோமீட்டர் தூரம் வரை நடைபயிற்சி மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளனர்.