கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சிவசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யாஸ்ரீ திருவட்டார் வட்டார அரசு குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்காக வித்யாஸ்ரீ மார்த்தாண்டம் வடக்கு தெருவில் இருக்கும் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்து சில நாட்களாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் அதே அறையில் தங்கியுள்ளார். இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் திடீரென படுக்கையில் வித்யா ஸ்ரீ படுத்திருந்த போது அந்த இளம்பெண் திடீரென பாய்ந்து அவரது கழுத்து பகுதியில் விரல் நகங்களால் கீறி தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்து வித்யாஸ்ரீ அலறி சத்தம் போட்டதால் அந்த இளம்பெண் சுய நினைவை இழந்த நிலையில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து விடுதியில் இருந்தவர்கள் வித்யாஸ்ரீயை மீட்டு தனியார் மருத்துவமனையிலும், இளம்பெண்ணை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன்பிறகு அந்த பெண் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, காலையில் எழுந்து பல் துலக்குவதற்காக பிரஷ் எடுத்தது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. வித்யாஸ்ரீயை தாக்கியது நினைவில் இல்லை. எதுவும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இது தொடர்பாக வித்யா ஸ்ரீ மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருடன் தனியாக வசிப்பதற்காக அந்த வாலிபர் வாடகை வீடு தேடி வந்துள்ளார். இதனால் அந்த வாலிபர் இளம்பெண்ணை விடுதியில் தங்க வைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.