பெங்களூரு எலகங்கா தாலுகா ராஜனகுண்டே அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டிரைவர் மதுசந்திரா(26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதேபோல் ராஜனகுண்டே அருகில் சானுபோகனஹள்ளியில் வசித்து வந்தவர் ராஷி(19). இவர் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் மதுசந்திராவுக்கும், ராஷிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து ராஷியை, மதுசந்திரா காதலித்து வந்தார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தனர். சென்ற சில நாட்களுக்கு முன் மதுசந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது குறித்து ராஷிக்கு தெரியவந்தது. இதன் காரணமாக அவர் மதுசந்திராவுடனான காதலை முறித்து கொண்டார். அதன்பின் மதுசந்திரா காதலை முறித்து கொண்டது பற்றி ராஷியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியை மதுசந்திரா சரமாரியாக குத்தினார்.

இதனால் படுகாயமடைந்த ராஷி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக ராஜனகுண்டே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மதுசந்திராவை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.