வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறக்கூடிய கடன்களை திருப்பி செலுத்துவதில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தன்மையுடன் செயல்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கடன் தகவல் நிறுவனம் (சிஐசி) தெரிவித்து உள்ளது. இதுகுறித்த புள்ளி விபரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது “கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் தர மதிப்பீட்டில் பெண்களில் 57% பேரின் மதிப்பீடு சிறப்பாக இருக்கிறது.

அதே சமயத்தில் ஆண்களில் 51% பேரின் மதிப்பீடு மட்டுமே சிறப்பாக இருக்கிறது. தொழில் துவங்குவதற்காக பெண்கள் கடன் கோருவது தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் தொழில் கடன் கேட்டு விண்ணப்பிப்பது 32% உயர்ந்துள்ளது. இதனிடையில் பெண்கள் அதிகமாக கடன் பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 91.7 லட்சம் பெண்கள் கடன் கணக்கு வைத்திருக்கின்றனர். விகிதாசார அடிப்படையில் மேற்கு வங்கத்தில் பெண்கள் கடன் வாங்கும் எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.