தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட் என்று சொல்வதற்கு பதிலாக திஸ் கவர்மென்ட் என்று ஆரம்பித்த ஆளுநர் தமிழ்நாடு அமைதி பூங்கா என்ற வார்த்தையை சொல்ல தவிர்த்தது ஆளும் கட்சி உட்பட எதிர்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அம்பேத்கர், காமராஜர், அண்ணா, பெரியார், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் தன் உரையில் இருந்து தவிர்த்து விட்டார்.

இது திமுக கூட்டணி கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதோடு  சில கட்சிகள் அவையை விட்டும் வெளியேறியது. அதன் பிறகு ஆளுநர் பேசிக் கொண்டிருக்கும் போதே சில வார்த்தைகளை ஆளுநர் தவறவிட்டதால் கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூற அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பாகவே ஆளுநர் அவையை விட்டு வெளியேறி விட்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி இணையதளம் வாயிலாக பாஜக சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சட்டப்பேரவையில் ஆளுநரை மிரட்டும் விதமாக கூச்சலிட்ட வேல்முருகன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் இணையதளம் மூலமாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.