திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அம்மா உணவகங்கள் மூலம் கூலி தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், பிற தொழிலாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் சாலை விவரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில் அம்மா உணவகங்களில் தரமான உணவுகள் தற்போது வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் முதியவர் ஒருவர் காலை நேர உணவுக்காக இட்லி கேட்ட போது இல்லை என்று கூறிவிட்டு, சற்று நேரத்தில் ஒரு இட்லிக்கு இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு பன்றிகளுக்கு இட்லியை போட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை 7-வது வார்டு உறுப்பினர் கண்மணி என்பவரது கணவர் சுண்ணாம்புமணி எடுத்துள்ளார். அதோடு இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை இது தொடர்பாக புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாநகராட்சி உரிய முறையில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.