போதைப்பொருள் வழக்கில் கைதான ஒருவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கேரளா உயர்நீதிமன்றம், வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்குக் கைதான தகவலைத் தெரிவிப்பது சட்டப்படி செல்லும் என மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷமீம் என்பவர், கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முத்தங்கா சோதனைச் சாவடி அருகே சுமார் 95.93 கிராம் எம்.டி.எம்.ஏ (MDMA) போதைப்பொருளுடன் பிடிபட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கௌசர் எடப்பகத், காவல்துறையின் நடவடிக்கையை உறுதி செய்தார்.
போலீசார் ஷமீமைக் கைது செய்தபோது, அவரது உறவினரை நேரில் வருமாறு அழைத்துள்ளனர்; ஆனால் அவர் வர மறுத்ததால், கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை போலீசார் வாட்ஸ்அப் மூலம் அந்த உறவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
இது சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதற்குச் சமமானது என்றும், கைதான விவரம் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம், ஷமீமுக்கு ஜாமீன் வழங்க முடியாது என அதிரடியாகத் தெரிவித்துவிட்டது. டிஜிட்டல் காலத்தில் வாட்ஸ்அப் தகவலையும் ஒரு ஆதாரமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது சட்ட வட்டாரங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
