பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பு மகத்தான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. பெரும்பான்மை நீதிபதிகள் எடுக்கும் முடிவுடன் முரண்பட்டு அளிக்கப்படும் தீர்ப்பானது மாறுபட்ட தீர்ப்பு மற்றும் முரண்பட்ட தீர்ப்பு என அழைக்கப்படுகின்றது. அத்தகைய மாறுபட்ட தீர்ப்பானது மகத்தான தீர்ப்பாக வரலாற்றில் இடம் பெறும்.

அந்த வகையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீதிபதி பி.வி நாகரத்னா அளித்துள்ள தீர்ப்பு மகத்தான தீர்ப்பாக அமைந்துள்ளது. இது போன்ற முடிவுகள் எடுக்கும் போது நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது என நாகரத்னா குறிப்பிட்டுள்ளார். 24 மணி நேரத்தில் எப்படி முடிவு எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி மத்திய அரசின் விளக்கத்திற்கும் ரிசர்வ் வங்கியின் விளக்கத்திற்கும் அதிக முரண்பாடுகள் உள்ளதாக தெரிவித்தார்.பண மதிப்பிலப்பால் பொதுமக்கள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.

பண முடக்கத்தின் நோக்கம் நிறைவேறவில்லை எனக் கூறிய நீதிபதி பண மதிப்பிழப்பு விளைவுகளை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டதா என கேள்வி எழுப்பினார். ஒரு அரசாணை மூலம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது ஏற்க முடியாது எனவும் பண மதிப்பிழக்க ஆணை சட்டத்திற்கு எதிரானது எனவும் நீதிபதி நாகரத்தினா தெரிவித்தார். மக்கள் அடைந்த துன்பங்களை நீதிபதி பி.வி.நாகரத்னாவின் தீர்ப்பு பேசுகிறது. இதுதான் மிக முதன்மையானது. நாடாளுமன்ற பங்கு குறித்து அவர் பேசியது மிக மிக இன்றியமையாதது.

நாடாளுமன்ற நடைமுறைப்படி பண முடக்கம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் தான் அது மக்களாட்சிக்கு உட்பட்டதாக இருக்க முடியும். நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முன்பு விவாதம் நடந்திருக்க வேண்டும் என்பது நீதிபதியின் வரிகள். ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 26-ல் 2-ன் படி பண மதிப்பிழப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நீதிபதி நாகரத்தினா சுட்டிக்காட்டி இருக்கின்றார். மத்திய அரசுக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் இல்லை என்பதையும் அவர் விளக்கியுள்ளார். எனவே பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பு மகத்தான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.