தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை அரசு சார்பில் சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னை தீவு திடலில் ஜனவரி 13-ஆம் தேதி சென்னை சங்கமம் 2023 என்ற விழாவை நான் தொடங்கி வைக்கிறேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒருங்கிணைத்து சென்னை சங்கமம் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பறையாட்டம், கரகாட்டம் மற்றும் மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உட்பட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு வாய்ந்த உணவுகளும் உணவு திருவிழாவில் இடம் பெறுகிறது. அதோடு இலக்கியத் திருவிழாவும் நடைபெற இருக்கிறது. தமிழ் மண், தமிழக மக்களின் கலைகள் போன்றவற்றை உங்களிடம் வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்ற கழகம் பெருமைப்படுகிறது. தமிழர் என்ற இனமுண்டு. தனியே அவருக்கு ஒரு குணம் உண்டு. இந்த மாபெரும் கலைத் திருவிழாவிற்கு மக்கள் அனைவரும் வாருங்கள். மேலும் நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.