திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி வேலை அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் நீல நிற அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 3,890 மாற்று திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக மாதம் தோறும் இரண்டாவது  செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்க்கிழமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையிலும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. வருகிற பத்தாம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. இதனை மாற்று திறனாளிகள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பகுதியில் அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு நீல நிற வேலை அட்டையினை பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.