பாஜக எம்பி கௌதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்..

2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி ஆக உள்ள ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பாக பணியாற்ற உள்ளதால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரத்தில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு சேவை செய்ய பல்வேறு வாய்ப்புகளை தந்த பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டாவிற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்

எம்.பி ஜெயந்த் சின்ஹா தனது எக்ஸ் பக்கத்தில், மாண்புமிகு கட்சியின் தலைவர் திரு ஜே.பி.நட்டா ஜியிடம் கோரிக்கை வைக்கிறேன், பாரதத்திலும் உலகெங்கிலும் உள்ள உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் எனது முயற்சிகளை நான் கவனம் செலுத்த முடியும் என்பதற்காக, எனது நேரடி தேர்தல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக பாரத் மற்றும் ஹசாரிபாக் மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் வழங்கப்பட்ட பல வாய்ப்புகளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷாஜி, மற்றும் பாஜக தலைமை. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கிழக்கு டெல்லி எம்பி  கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு மாண்புமிகு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துளேன், இதனால் எனது வரவிருக்கும் கிரிக்கெட் கடமைகளில் கவனம் செலுத்த முடியும். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்!” என தெரிவித்திருந்தார்..